செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்திற்கு, கட்டுமானம் உள்ளிட்ட கூலித் தொழில்கள், சிறு வியாபாரம் உள்ளிட்டவற்றுக்காக, சுற்றுப்புற பகுதியினர், தினசரி வந்து செல்கின்றனர். இதேபோன்று, கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெய்குப்பி, மாமல்லபுரம் ஆகிய பகுதிகளிலும், சுற்றுப்புற கூலித் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
இப்பகுதிகளில், நீண்டகாலமாக வெற்றுத்தாளில் எண்கள் எழுதி, குலுக்கலில் தேர்வாகும் எண்கள் எழுதியவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கும் காட்டன் சூதாட்டம் நடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், சிலரே தரகர்களாக இருந்து நடத்தி வந்தனர். தொழிலாளர்கள் சூதாடுவது அதிகரிக்கும் நிலையில், தரகர்களும் பெருகி வருகின்றனர்.
சிலருக்கு பரிசும் கிடைப்பதால், கூலித் தொழிலாளர்கள் பரிசு ஆசையில் நாளுக்கு நாள் பங்கேற்பாளர்களாக அதிகரித்து வருகின்றனர். அதனால், கூலித் தொகையில் பெரும்பகுதியை, சூதாட்டத்தில் இழக்கின்றனர். இதனால் குடும்பத்தினர் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்கவேண்டிய போலீசார், காட்டன் சூதாட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டும் அப்பகுதிவாசிகள், காவல் துறை உயரதிகாரிகள் சூதாட்டத்தை தடுக்க, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்துகின்றனர்.