காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதியில், டி. கே. நம்பி தெரு, காந்தி சாலை, நெல்லுக்கார தெரு, காமராஜர் சாலை, மேற்கு ராஜ வீதி, கீரை மண்டபம் என பல்வேறு சாலைகள் நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன.
இந்த சாலைகளில் மழைநீர் தேங்கக் கூடாது என்பதற்காக, சாலையின் இருபுறமும், நெடுஞ்சாலைத் துறை சார்பில், மழைநீர் கால்வாய்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த கால்வாய்களில், மழைநீர் வடிவதை காட்டிலும், முறைகேடாக பலரும், கழிவுநீர் இணைப்பை ஏற்படுத்தி, 24 மணி நேரமும், கழிவுநீர் சென்றுக் கொண்டிருக்கிறது.
இதனால், மழைநீர் வடிய இடமில்லாமல், மீண்டும் சாலையிலேயே தேங்குகிறது. மழைநீர் வடிகால் கட்டியதற்கான நோக்கமே இங்கு நிறைவேறாமல் போவதாக நகரவாசிகளும், வாகன ஓட்டிகளும் குற்றஞ்சாட்டுகின்றனர். பிளாஸ்டிக் பாட்டில்கள், குப்பை, கூளங்கள் நிறைந்து மழைநீர் கால்வாய் நாசமாகியுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டப்பட்ட மழைநீர் கால்வாய்கள் செயலற்று கிடக்கிறது.
கால்வாய்களை சுத்தம் செய்து, மழைநீர் வடிவதற்கான நடவடிக்கைகளை நெடுஞ்சாலைத் துறையினர் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.