செங்கல்பட்டு மாவட்டத்தில், 2023 ஜனவரி முதல் 2024 ஜூலை வரை, சார் - பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட, ஐந்து அரசு துறை அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி, லத்துார் ஒன்றியம், தண்டரை கிராமத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய, 7, 000 ரூபாய் பணத்தை, நண்பர் வாயிலாக பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சுதாகர், 40, சென்னை லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதே தினத்தில், கூடுவாஞ்சேரி சார் - பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத 4. 26 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், புகாரின் பேரில் சமூகநலத்துறையில் இரண்டு பேரும், வருவாய் துறையில் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட காலகட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஆறு பேரும், வருவாய் துறையில் மூன்று பேரும், மருத்துவ துறையில் ஒருவரும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு, என் தந்தை இறந்த பின், தந்தை பெயரில் இருந்த வீட்டை அளவீடு செய்து, என் பெயரில் பட்டா மாற்றம் செய்ய, வருவாய் துறையினருக்கு பணம் கொடுத்த பின்னரே, பணிகளை துவங்கினர்.