கள்ளக்குறிச்சியில், ஊரக வளர்ச்சித்துறையின் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயற் பொறியாளர், உதவி பொறியாளர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கலைஞரின் கனவு இல்லத் திட்டம், தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், ஊரக குடியிருப்பு பழுது பார்த்தல் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், அயோத்திய தாசர் பண்டிதர் திட்டம் உள்ளிட்ட அனைத்து திட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பணிகளில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தையும் வரும் அக்டோபர் 8ம் தேதிக்குள் துவங்க வேண்டும். ஊரக குடியிருப்பு பழுது நீக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
கிராமப் புறங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அனைத்தையும் தினமும் குளோரினேஷன் செய்வதுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் அனைத்து ஊராட்சிகளில் நடைபெறும் அரசின் திட்டப்பணிகள் அனைத்தையும் குறிப்பிட்ட கால அளவிற்குள் விரைவாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.