கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில், சில தினங்களாக, மழை பெய்து பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, டெங்கு கொசு உற்பத்தியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், நகராட்சி சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மற்றும் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி, நகராட்சி பகுதிகளில், தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.
வீடுகள்தோறும் நலக்கல்வி மூலமாக கொசுப்புழு ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. நகராட்சி முழுதும் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன் தலைமையில், 30க்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடுகள், கடைகள், திருமண மண்டபங்கள் ஆகிய இடங்களில் சோதனை நடத்தி, பூந்தொட்டிகள், டயர், தண்ணீர் தொட்டி, தேங்காய் ஓடுகளில் தேங்கும் தண்ணீரை அகற்றி டெங்கு கொசு ஒழிப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.