ஈரோடு பெரிய சேவூர், கள்ளன் காடு, ஸ்ரீ ராம் நகர் பகுதி சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவரது மனைவி முத்துச்செல்வி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன் - மனைவி இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.
மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
மணிகண்டன் மனைவி வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்று விட்டார்வீட்டில் இருந்த மணிகண்டன் நண்பர்களுடன் வில்லரசம்பட்டி, கறிவல்பாறை வலசு பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது மணிகண்டன் மதுபோதையில் குளித்து கொண்டிருந்தார். திடீரென மணிகண்டன் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.
இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் மற்றும் மீனவர்கள் நீரில் இறங்கி மணிகண்டனை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது அவர் மூச்சுப்பேச்சு இன்றி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே மணிகண்டன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.