கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் மாருதி நகரை சோ்ந்த சையது மகன் அப்துல் கரீம். தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று மாலை நண்பா்களுடன் பட்டாம்பாக்கம் தென்பெண்ணை ஆற்றின் பாலத்தின் அருகே தேங்கி நின்ற தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அப்துல் கரீம் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். இதைப் பாா்த்த அவரது நண்பா்கள் சத்தம் போட்டனர்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவலளித்தனர். இதையடுத்து நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலைய அலுவலா் எம். கவிதா தலைமையிலான வீரா்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கிய அப்துல் கரீமை நீண்ட நேரமாகத் தேடி சடலமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.