வால்பாறை அருகே இடியும் நிலையில் உள்ள பயணியர் நிழற்கூரையை மக்கள் பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். வால்பாறையில் உள்ள மாணிக்கா எஸ்டேட் பகுதியில் மாதா கோவில் சந்திப்பில் நகராட்சி சார்பில் பயணியர் நிழற்கூரை கட்டப்பட்டது. இந்த நிழற்கூரை பாழடைந்து காணப்படுகிறது. பக்கவாட்டிலும், மேற்கூரையும் சேதமடைந்துள்ளது.
இடிந்து விழும் நிலையில் உள்ள நிழற்கூரையை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. மேலும் நிழற்கூரை பள்ளத்தில் இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை காலங்களில் பயணியர் ஒதுங்கி நிற்பதற்கு வேறு இடமில்லை. மக்கள் பயன்பாட்டிற்காக, கட்டப்பட்ட பயணியர் நிழற்கூரையை இரவு நேரங்களில் குடிமகன்கள் திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். நகராட்சி சார்பில் மாதா கோவில் சந்திப்பில் புதிய நிழற்கூரை கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.