கோவை குமரகுரு பன்முகக்கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள் என்ற தலைப்பில் தேசிய மாநாடு நேற்று(செப்.29) நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல உதவி தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வி. ப. யதீஸ்குமார் தாமிரபரணி ஆற்றங்கரை தொல்லியல் அகழாய்வுகள் குறித்து உரையாற்றினார்.
முனைவர் யதீஸ்குமார் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை அகழாய்வுகள் பற்றி விரிவாக விளக்கினார். பாண்டியர்களின் பழைய துறைமுகங்களான கொற்கை மற்றும் அழகன்குளம் பற்றியும், தாமிரபரணி நாகரிகத்தின் பழமை குறித்தும் தொல்லியல் ஆதாரங்களுடன் விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம் அகழ்வாராய்ச்சி களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பழைய பொருட்களின் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.