சென்னை, கோடம்பாக்கம் மண்டலம், அசோக் நகர் இரண்டாவது அவென்யூவில், அசோக் நகர் காவல் நிலையம் செயல்படுகிறது. இங்கு, சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு, உதவி கமிஷனர் அலுவலகம், பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையம், அசோக் நகர் மகளிர் காவல் நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.
இதனால், காவல் நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவி வருகிறது. அதேபோல், காவல் நிலைய வளாகத்தின் உள்ளே, வழக்குகளில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட 'பைக்'குகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து, காவல் நிலைய வளாகத்தின் சுற்றுச்சுவர் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பைக்குளை அகற்றி விட்டு வரவேற்பு அறை, விசாரணை அறை, பெண்களுக்கு தனி அறை ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து இந்த கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக, குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், ஏற்கனவே இருந்த காவல் நிலைய சுற்றுச்சுவரை உடைத்து, அங்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது, அசோக் நகர் காவல் நிலையத்தில் ஆண் மற்றும் பெண் போலீசார் உடை மாற்ற, போதிய இட வசதியில்லை. குற்றவாளிகளை வைத்து விசாரிக்கவும் போதிய இடம் இல்லை. இதனால், நன்கொடை பெற்று, காவல் நிலைய வளாகத்திற்குள் மேற்கண்ட கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. சாலையையோ, நடைபாதையையோ ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்படவில்லை என கூறினர்.