திருச்சி திராவிட மணியின் படுகொலைக்கு என்ன பதில் கூறப்போகிறது? அமைச்சருக்கு ஒரு நீதி? சாமானிய மக்களுக்கு வேறு நீதியா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட திருச்சி மாவட்டம், பழூர் காந்திநகரைச் சேர்ந்த திராவிடமணி காவல் துறையினரின் தாக்குதலில் உயிரிழந்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. திருச்சி மாநகர், ஜீயபுரம் தனிப்படை காவல்துறையினர் கடந்த 26-ம் தேதி திராவிட மணியை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக அழைத்துசென்று, 27-ம் தேதி வரை போக்குவரத்துக் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்துள்ளனர். பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திராவிட மணி கடந்த 28-ம் தேதி உயிரிழந்தார்.
அடிப்படை மனித உரிமை, சமத்துவம், சமூக நீதி, சட்டத்தின் ஆட்சி, கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் பேசிவிட்டு, காவல்துறைக்கே களங்கம் ஏற்படுத்திய காவலர்களைக் காப்பாற்ற முனைவது எவ்வகையில் நியாயமாகும்? இதற்குப் பெயர்தான் திராவிட மாடல் ஆட்சியா? என்ற கேள்வியும் எழுகிறது. ஆகவே, திமுக அரசு இனியும் காலங்கடத்தாமல் தம்பி திராவிட மணியின் மரணத்துக்குக் காரணமான காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கினைப் பதிந்து கைது செய்வதுடன், விரைவான, நியாயமான நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.