தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும், இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், இலங்கையின் புதிய அதிபராக சிங்கள பேரினவாத அமைப்பான ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் தலைவர் அநுரா குமார திசநாயக்க பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4-ம் தேதி இலங்கை செல்கிறார். இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும் இலங்கை அதிபரை வலியுறுத்த வேண்டுமென்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.