தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை நேற்று முன்தினம் (செப்.,28) மாற்றியமைக்கப்பட்டது. அதில் அமைச்சர்களாக இருந்த மனோ தங்கராஜ், செஞ்சி மஸ்தான், கே. ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டனர்.
அதேவேளையில் ஆவடி நாசர், செந்தில் பாலாஜி, ராஜேந்திரன், கோவி. செழியன் ஆகியோர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (செப்.,29) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டது. அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடாவாக இருந்த கோவி. செழியன் அமைச்சரானதால், அவர் வகித்து வந்த அரசு தலைமை கொறடா பதவி காலியானது.
இதைத் தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட கா. ராமசந்திரனுக்கு அந்த தலைமை கொறடா பதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலாளர் கி. சீனிவாசன் நேற்று (செப்.,29) வெளியிட்ட அறிவிப்பில், குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ராமசந்திரன், அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.