குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், சென்னை போலீஸார் பொதுமக்கள் பார்வையில் படும்படி தினமும் ரோந்து சுற்றி வருகின்றனர். பகுஜன் சமாஜ்வாதி கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5-ம்தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதையடுத்து, சென்னையில் ரவுடிகளுக்கு எதிரான நடவடிக்கையை போலீஸார் முடுக்கிவிட்டனர். குறிப்பாக ரவுடிகளை ஏ, ஏ-பிளஸ், பி, சி என 4 பிரிவாக வகைப்படுத்தி, தலைமறைவு ரவுடிகளை கைது செய்ய அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பு, ரோந்துப் பணிகளை முடுக்கிவிட்டனர். காவல் நிலையங்களில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக பிற மாநிலங்களில் பதுங்கியவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் ரவுடிகள் 3 பேர் அடுத்தடுத்து என்கவுன்ட்டரில் சுட்டுகொல்லப்பட்டனர். 300-க்கும்மேற்பட்ட ரவுடிகள் கைதுசெய்யப்பட்ட நிலையில், 150-க்கும் மேற்பட்டோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் அச்சமின்றி பொது வெளியில் நடமாடவும், ரவுடிகளுக்கு பயத்தை ஏற்படுத்தும் வகையிலும் பொதுமக்கள் பார்வையில் படும்படி, முக்கிய சாலைகள் மற்றும் தெருக்கள் வழியாக போலீஸார் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ரோந்து செல்ல வேண்டும் எனக் காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டார்.