அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 10 வயது சிறுமியின் வாக்குமூல ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பான போக்சோ வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை தண்ணீர்கேன் சப்ளை செய்யும் இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது சம்பந்தப்பட்ட இளைஞரின் பெயரை புகாரில் இருந்து நீக்கக்கோரி காவல் ஆய்வாளர் ராஜி உள்ளிட்ட போலீஸார் தாக்கியதாக சிறுமியின் பெற்றோர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ். எம். சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (அக்.,1) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் காவல்துறை விசாரணை மீது சிறுமியின் பெற்றோரே நம்பிக்கை இழந்துவிட்டனர். அதற்கு உரிய காரணம் இருப்பதாக நாங்களும் நம்புகிறோம். எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றுகிறோம். அதேபோல சிறுமிக்கும், பெற்றோருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். போக்சோ சட்டத்தின் கீழ் கூடுதல் இழப்பீடு பெற சிறுமியின் பெற்றோர் உரிய நீதிமன்றத்தை அணுகி பரிகாரம் தேடலாம் என உத்தரவிட்டுள்ளனர்.