சென்னை - திருவண்ணாமலை, விருத்தாச்சலம் - கும்பகோணம் ரயில் பாதை உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சரிடம் தமிழக பாஜக மனு அளித்துள்ளது.
டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை, தமிழக பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் இன்று சந்தித்தார். அப்போது, 3 ரயில்வே கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு அளித்தார்.
சென்னையிலிருந்து திண்டிவனம் வழியாக நேரடியாக திருவண்ணாமலைக்கு இருப்புப் பாதை அமையும். பயண நேரம் 3 மணி நேரமாக குறையும். விருத்தாசலத்திலிருந்து கும்பகோணத்துக்கு ரயில் பாதை அமைத்து தர முயற்சி எடுக்குமாறு கும்பகோணம் அனைத்து தொழில் வணிக கூட்டமைப்பினர் என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் அடிப்படையில் இது தொடர்பான கோரிக்கை உள்ளிட்ட 3 கோரிக்கைகளையும் நிறைவேற்றக் கோரி மத்திய அமைச்சரை சந்தித்து மனு அளித்தோம் என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் கூறினார்.