தள்ளுவண்டி கடையை அப்புறப்படுத்திய மாநகராட்சி ஊழியர்கள்

சேலம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். சலவை தொழிலாளியான இவர் கடந்த 24 ஆண்டுகளாக சேலம் மாநகர் பெரமனூர் பகுதியில் சாலையோரத்தில் தள்ளுவண்டியில் சலவை கடை வைத்து தொழில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் எதிரே இருக்கும் வீட்டின் உரிமையாளரான அருண் ஜேக்கப் என்பவர் போக்குவரத்துக்கு இடையூறாக கடை நடத்துவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள், இன்று மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரை கொண்டு வெங்கடாசலம் சலவை செய்து கொண்டிருக்கும்போதே கடைகளில் இருந்த துணிகளை அப்புறப்படுத்திவிட்டு, தள்ளுவண்டி கடையை தூக்கி மாநகராட்சி வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இதனால் மனமுடைந்த சலவை தொழிலாளி வெங்கடாசலம் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சாலையின் ஓரமாக கடந்த 24 வருடங்களாக கடை நடத்தி வந்ததாகவும், இங்கு இருக்கும் பொதுமக்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் வீட்டின் முன் கடை இருக்கும் ஒரே நோக்கத்தில் ஒருவர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது தன்னுடைய கடையை மாநகராட்சி அதிகாரிகள் முன்னறிவிப்பு ஏதுமின்றி அப்புறப்படுத்தியுள்ளதாகக் கண்ணீர் மல்க கூறினார்.