சிவதாபுரம் பகுதியில் உபரிநீர் செல்ல வடிகால் அமைக்கும் பணி

சேலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சிவதாபுரம் அருகில் சுமார் 70 ஏக்கர் நிலப்பரப்பளவில் சேலத்தாம்பட்டி ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு மழைக்காலங்களில் சோளம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. ஆனால் மழைக்காலங்களில் சேலத்தாம்பட்டி ஏரி முழுவதும் நிரம்பி அதன் உபரிநீர் சிவதாபுரம், பனங்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஊருக்குள் வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையுள்ளது. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் புகுந்து விடுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மழைநீர் வடியாமல் பல நாட்கள் தேங்கி நிற்பதால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஆனால் மழை நேரத்தில் மட்டும் இப்பிரச்சினைக்கு தற்காலிக தீர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகளும் உடனடியாக அங்கு வந்து வெள்ள சேதத்தை பார்வையிடுவதும், அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிடுவதாகவும் புகார் எழுந்தது.

இதனிடையே, சேலத்தாம்பட்டி ஏரி உபரிநீர் ஊருக்குள் புகுவதை தடுக்கும் வகையில் உபரிநீர் செல்லும் கால்வாய்கள் அமைக்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ. 7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 1,500 மீட்டர் நீளம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.