விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம், சாத்தூர் பகுதியில் இன்று (நவம்பர் 29) கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. வாடகை கட்டிடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்கள் 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி கட்ட வேண்டும். நாடு முழுவதும், கடந்த செப்டம்பர் மாதம் முதல் இந்த புதிய வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாடகை கட்டிடங்களில் இயங்கும் வணிக நிறுவனங்களுக்கு இந்த புதிய வரி விதிப்பினால் கடும் பாதிப்பு ஏற்படும் என்பதால் இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு வர்த்தகர்கள் சங்கம் சார்பில் கடையடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்ட வர்த்தகர்கள் சங்கம் சார்பாக இன்று நவ. 29 முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகரின் நான்கு ரத வீதிகள், மெயின் பஜார், ஜவுளி கடை வீதி, புது ரோடு தெரு, சாத்தூர், விருதுநகர் சாலையில் உள்ள பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தேநீர் கடைகள், சிறிய உணவகங்கள், சாலையோர காய்கறி விற்பனை கடைகள் சில திறக்கப்பட்டுள்ளன. சுமார் 70 சதவீத கடைகள், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.