
பூங்கா அமைக்காமல் உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் மெத்தனம்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில், 40,000 மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள, பல்வேறு பகுதிகளில் பூங்கா அமைக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில், பெரியார் நகர் பகுதியில் மட்டும் பூங்கா இல்லாமல் உள்ளது. இதனால், அப்பகுதி சிறுவர்கள் விளையாடவும், இளைஞர்கள் மற்றும் முதியோர் நடைபயிற்சி மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதற்காக, வேறொரு பகுதியில் உள்ள பூங்காவுக்கு சென்று வரவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது குறித்து, அப்பகுதி மக்கள் 2022ல் மாவட்ட குறைதீர் கூட்டத்தில், மனு அளித்திருந்தனர். அதன்படி, 2023ல் பெரியார் நகரில் பூங்கா அமைக்க பேரூராட்சி மன்றத்தில் தீர்மானமும் இயற்றப்பட்டது. தொடர்ந்து, பூங்கா அமைப்பதற்கான 1,600 சதுர மீட்டர் பரப்புள்ள நிலமும் ஒதுக்கப்பட்டது. ஆனால், பேரூராட்சி நிர்வாகத்தினர் நிதி இல்லை என்று கூறி, பூங்கா அமைக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால், பூங்கா அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து வருகின்றன.