காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், 100 ஆண்டுகள் பழமையான கட்டடங்களில், போதிய இடவசதி இன்றி செயல்பட்டு வந்தது. இதனால், புதிய ராஜாஜி மார்க்கெட் கட்டும் பணிகள், 7 கோடி ரூபாய் மதிப்பில், 2022ல் துவங்கப்பட்டன. மார்க்கெட் கட்டுமானப் பணிகள் துவங்கியதால், ஓரிடத்தில் தற்காலிக மார்க்கெட் இடம் மாறியது. கட்டுமான பணிகள் முடிந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டில் முதல்வர் ஸ்டாலின் மார்க்கெட்டை திறந்து வைத்தார்.
மார்க்கெட்டில், கான்கிரீட் தளம் கொண்ட கடைகள், தரை கடைகள், கிடங்கு என, 258 கடைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் 12ம் தேதி ராஜாஜி மார்க்கெட்டில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் பூஜை நடத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் கட்டடத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைத்து வர்ணம் தீட்டுதல், உட்புறத்தில் தடுப்பு கம்பி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சமீபத்தில் முடிந்தது. ராஜாஜி மார்க்கெட்டில், காய்கறி, மளிகை உள்ளிட்ட வியாபாரத்தை நேற்று வியாபாரிகள் துவக்கினர். நிகழ்வில் உத்திரமேரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., சுந்தர், தி.மு.க., நிர்வாகிகள், மார்க்கெட் சங்க நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.