

நத்தம்: பல்லுயிர் பாதுகாப்பு தளம் அமைக்க எதிர்ப்பு
நத்தம் வட்டம், ரெட்டியபட்டி ஊராட்சி காசம்பட்டி கிராமத்தில் பல்லுயிர் பாதுகாப்பு தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர். மனுவில் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டம், ரெட்டியபட்டி அருகே காசம்பட்டி கிராமத்தில் சுமார் 12 ஏக்கர் 48 செண்டில் வீர கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெற்று வருகிறது. வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை பல்லுயிர் பாதுகாப்பு தளமாக அறிவிப்பதாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறை சார்பில், அழகர் கோவில் வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார். எங்கள் பகுதியில் உள்ள கோவிலை எங்களது முன்னோர்கள் பாரம்பரியமாக பாதுகாத்து பராமரித்து வந்த கோவில் ஆகும். இந்நிலையில், வனச்சரக கட்டுப்பாடு எடுத்துச் சென்று விடும் என்று அச்சத்தில் காசம்பட்டி கிராம மக்கள் உள்ளனர். ஆகையால் பல்லுயிர் பூங்கா திட்டத்தில் சேர்க்காமல் நிறுத்திவைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்திருந்தனர்.