திண்டுக்கல் - Dindigul

அனுமதியின்றி ரேக்ளா பந்தயத்தால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சித்திரை மாதத்தின் கடைசி 7நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் 7நாட்கள் என 14நாட்கள் கிரிவலம் சென்று வழிபடுவது வழக்கம். இதன்படி இன்று வைகாசி மாதம் ஏழாம் நாளான கடைசி கிரிவலத்தை முன்னிட்டு பழனி, உடுமலை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ரேக்ளா வண்டியில் பழனி கோவிலுக்கு கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்று வழிபாடு முடித்து விட்டு மீண்டும் ஊர்களுக்கு திரும்பினர். அப்போது பழனி-உடுமலை நெடுஞ்சாலையில் உள்ள ஆர். வாடிப்பட்டி அருகே திங்கட்கிழமை காலை 11. 30 மணியளவில் ரேக்ளா வண்டிகள் சென்றபோது அவர்களுக்குள் திடீரென பந்தயம் நடத்தினர். திடீரென நடத்தப்பட்ட ரேக்ளா பந்தயத்தால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். எதிரே வரும் வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் அதிவேகமாக மாட்டு வண்டிகளை அடித்து விரட்டி ஓட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை பராமரிப்பு உதவி இயக்குனர் முருகன், வட்டாட்சியர் சக்திவேலன், காவல்துறை ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பழனி கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்புவது தவறல்ல. ஆனால் போட்டி போட்டு பந்தயம் நடத்தும் வகையில் வேகமாக செல்வது தவறு என்று எச்சரித்தனர்.

திண்டுக்கல்