பேரூர்: மிகைநீர் போக்கியில் உள்ள குறைகளை சரி செய்ய கோரிக்கை
கோவை மாவட்டத்தின் நொய்யல் திட்ட ஏரிகளில் ஒன்றான பேரூர் பெரியகுளத்தின் மிகைநீர் போக்கியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய கோரி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இன்று கோரிக்கை விடுத்துள்ளது. பேரூர் பெரியகுளத்திற்கு இரண்டு மிகை நீர்ப்போக்கிகள் உள்ளன. பேரூர் சிறுவாணி சாலை அருகில் 86 அடி அளவிலான மிகைநீர்ப்போக்கி அமைந்துள்ளது. இந்த மிகைநீர்ப்போக்கியின் உயர்ந்தபட்ச நீர் மட்டத்தை அடையும் முன்பே, அதன் அருகாமையில் உள்ள பேரூர் பேரூராட்சி கழிவுநீர் கால்வாய் கட்டமைப்பு வழியாக குளத்தின் நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குளத்தின் நீர் தேங்கும் பரப்பளவு 1. 072 சதுர கிலோமீட்டரிலிருந்து 9 அங்குலம் குறைந்துள்ளதாகவும், இதனால் 24 கோடி லிட்டர் நீர் தேங்கும் திறனை இழப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நீர் வரத்து உள்ள காலத்திலேயே குளத்தின் கொள்ளளவு முழு மட்டத்திற்கு இருப்பதை உறுதி செய்யும்படியும், மிகைநீர் போக்கியின் அருகாமையிலுள்ள கழிவுநீர் கால்வாய் வழியாக குளத்து நீர் வெளியாவதை தடுக்க போர்க்கால நடவடிக்கையின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளுமாறும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையானது மாவட்ட ஆட்சித்தலைவர், நீர் வள ஆதாரத்துறையின் செயற்பொறியாளர், மற்றும் நொய்யல் பாசன உபகோட்டத்தின் உதவி செயற்பொறியாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.