காரியாபட்டியில் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி முக்குரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாண கணபதி, ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ சந்தன கருப்பசாமி திருக்கோவில் வைகாசி பொங்கல் திருவிழா கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் நடைபெற்று வரும் இந்த திருவிழாவில் அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், கரகம் எடுத்தல், விளக்கு பூஜை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் தொடர்ச்சியாக, இன்று முளைப்பாரி எடுத்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மன், கருப்பசாமி, அடுக்கு முளைப்பாரி, பயிர் முளைப்பாரிகள் அனைத்தும் வளர்த்த இடத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு, சிறிது தூரம் பெண்கள் தலையில் சுமந்து ஊர்வலமாகச் சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தனர். பின்பு பெண்கள், குழந்தைகள் கும்மி அடித்து மகிழ்ந்தனர். 

அதனைத் தொடர்ந்து இரவு நெடுங்குளம் தெற்காற்றில் இருந்து மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் கரகம் எடுத்து வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் பொங்கல் வைத்தல், மாவிலக்கு எடுத்தல், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி