விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் உள்ள சுயம்பு புத்துகோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நாகம்மாள், அம்மன், சிவன், ராகு, கேது, சூலாயுதம் உற்சவ சிலைகளுக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர், பன்னீர், சந்தனம், திருமஞ்சணம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இந்த பூஜையின்போது, சுமார் 2 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று புத்துகோவிலுக்கு வந்தது. நிஜ பாம்பை கண்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வணங்கினர். கூட்டம் அதிகமாக இருந்ததால், பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர். விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, சிவகாசி, கமுதி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.