ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆட்டோ மீது கார் மோதி விபத்து.. 3 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுரை மாவட்டம் எல்லை பகுதியில் முன்னாள் சென்ற ஆட்டோ மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பெண்கள் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். காயமடைந்த நான்கு பேர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமர் (51), தங்கம்மாள் (47), அருஞ்சுனை (60) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் விவசாய பணியில் ஈடுபட்டு மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். 

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ஏ.பாறைப்பட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கிச் சென்ற கார் முன்னாள் சென்ற ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ராமர், தங்கம்மாள், அருஞ்சுனை மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்தால் ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் பேரையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி