ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் கடும் சோதனைக்கு பிறகு அனுமதி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயந்திர துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பிறகே, நீதிமன்றத்திற்குள் வழக்குதொடர்பானவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் நீதிமன்றம் அருகில் வழக்கு விசாரணைக்கு வந்த ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் எஸ்.ஐ, 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

நீதிமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற கட்டடத்தின் நுழைவுப்பகுதியில் போலீசார் நியமிக்கப்பட்டு நீதிமன்றத்திற்கு வழக்குதொடர்பானவர்களை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்தபின்னரே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கின்றனர். 

நீதிமன்றத்தின் முன்பு சந்தேகத்திற்குரிய விதமாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களையும் அடிக்கடி சோதனை செய்து அப்புறப்படுத்துகின்றனர். இதனால் தற்போது நீதிமன்றத்திற்குள் தனிநபர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

தொடர்புடைய செய்தி