முஸ்லிம்களுக்கு எதிராக வக்ஃபு சட்டம் இயற்றிய மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக சிறிவில்லிபுத்தூர் தெற்குரத வீதியில் மேற்கு மாவட்டச் செயலாளர் மாறிச்செல்வம் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாகைகளை ஏந்தி தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்தின் அருகே நம்பி நாயுடு தெருவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மு.க.ஸ்டாலின் வாழ்க, விடுதலை சிறுத்தைகள் வாழ்க, காங்கிரஸ் வாழ்க என்பதை தொடர்ந்து கோஷமிட்டுக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்ததால் முதியவரிடம் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் இருந்த காவல்துறையினர் உடனடியாக அவரை வாகனம் மூலம் அழைத்துச் சென்றனர் இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.