விருதுநகர்: அபராதத்தொகையுடன் பணத்தை திருப்பிதர உத்தரவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பை சேர்ந்த வைகுண்ட மூர்த்தி என்பவர் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி சென்னை செல்வதற்கு கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கல் டிக்கெட் எடுத்திருந்தார். 

இந்நிலையில் மழை காரணமாக அந்த ரயில் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. ரத்து செய்யப்பட்ட ரயிலில் பயணம் செய்ய இருந்தவர்களுக்கு டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால் வைகுண்ட மூர்த்திக்கு டிக்கெட் தொகை திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. 

இதையடுத்து வைகுண்ட மூர்த்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர் விசாரித்தனர். 

விசாரணை முடிவில், வைகுண்ட மூர்த்திக்கு டிக்கெட் தொகை ரூ. 458, இழப்பீடு ரூ. 5,000, வழக்கு செலவு தொகை ரூ. 3,000 என மொத்தம் ரூ. 8,458-ஐ தெற்கு ரயில்வே நிர்வாகம் மற்றும் இந்திய ரயில்வே ஆணையம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி