விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் சமுசிகாபுரம் ஊராட்சியில் 20 கிராமங்களைச் சேர்ந்த 5000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சமுசிகாபுரம் ஊராட்சியை ராஜபாளையம் நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிமுக, திமுக, சிபிஐ, உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய சமுசிகாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜகோபால், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சமுசிகாபுரம் ஊராட்சியில் ஏழை எளிய கூலித் தொழிலாளர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். பகுதி மக்களின் வாழ்வாதாரமாக 100 நாள் வேலை திட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் ராஜபாளையம் நகராட்சியுடன் சமுசிகாபுரம் ஊராட்சியை இணைக்கும் பட்சத்தில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பறிபோகும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் ஊராட்சியை இணைப்பதை தவிர்க்க வேண்டும் என அனைத்து கட்சிகள் சார்பாக கோரிக்கை மனு அளித்தனர்.