விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே முறையாக மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் சாலைமறியல். அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை. சிவகாசி அடுத்த ஆலங்குளம் அருகேயுள்ள டி. கரிசல்குளம், நாகம்மாள் நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிகளில் கடந்த 2 நாட்களாக முறையாக மின்விநியோகம் இல்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். எனவே மின்சாரம் வழங்க வலியுறுத்தி ஆலங்குளம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லமநாயக்கர்பட்டி மின் பொறியாளர் கவுதம் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.