சிவகாசி: சாலை விபத்தில் மாமனார், மருமகன் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பாண்டியன் நகரில் வசித்தவர் சார்லஸ் பொன்ரசல் (28) அச்சக பணியாளர், கேரள மாநிலம் மூணாறை சேர்ந்த ஜோதிராஜ் (60) என்பவரின் மகள் சந்தியா (25)வுக்கும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, ஒரு வயது மகள் பவ்யா உள்ளார். தனது மகள் சந்தியாவையும், பேத்தி பவ்யாவையும் பார்க்க திருத்தங்கல்லுக்கு வந்திருந்த ஜோதிராஜ் மீண்டும் மூணாறுக்கு செல்ல இருசக்கர வாகனத்தில் சிவகாசி பேருந்து நிலையத்திற்கு திருத்தங்கல் சாலையில் வந்து கொண்டிருந்தார். 

மருமகன் இருசக்கர வாகனத்தை ஓட்டி வர மாமனார் பின்னால் அமர்ந்திருந்த நிலையில், அந்தப் பக்கமாக வந்த லாரி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்தில் சம்பவ இடத்திலேயே மாமனார் ஜோதிராஜ் உயிரிழந்தார். மருமகன் சார்லஸ் பொன்ரசல் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டபோது உயிரிழந்தார். 

விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து விபத்தில் உயிரிழந்த உடல்களை உடற்கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுநர் கணேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி