சாத்துார்: சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தவர் கைது

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்துள்ள ஏழாயிரம்பண்ணை அருகே சேர்வைக்காரன்பட்டி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் நபர் கைது செய்யப்பட்டார். சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் உத்தரவின் பேரில் கள்ளத்தனமாக வெடிகருவிகள், கருந்திரிகள் தயாரிப்பை தடுப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக கடந்த சில நாட்களாக ஏழாயிரம்பண்ணை போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ஏழாயிரம்பண்ணை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹரிராம் தலைமையில் போலீசார் ஏழாயிரம்பண்ணை, சேர்வைக்காரன்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப் பகுதியில் சோதனை நடத்தினர். இதில் பலர் காட்டுப்பகுதியிலும், வீட்டின் பின்பகுதியிலும் தகர செட் அமைத்து சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அவர்களில் மார்க்கநாதபுரம் இந்திரா காலனியை சேர்ந்த மான்ராஜ் என்பவரிடமிருந்து பேன்சி ரக வெடிகருவிகள், கருந்திரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மான்ராஜ் மீது ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி