விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் மூன்றாம் கட்ட அகழாய்வு கடந்த ஜூன் 18-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அகழாய்வில் இதுவரை தங்க நாணயம், சங்கினால் செய்யப்பட்ட பதக்கம், செப்பு காசுகள், உடைந்த நிலையிலுள்ள சூடு மண் உருவ பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லு, சங்கு வளையல்கள் உள்ளிட்ட 4400 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அகழாய்வில் பல அரிய வகை தொல்பொருட்கள் கிடைக்கப்பெற்ற நிலையில், தற்போது 13 செ.மீ ஆழத்தில் அஞ்சன கோல் என்று பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கோல், 29.5 செ.மீ நீளமும், 6.6 செ.மீ சுற்றளவும், 6.6 கிராம் எடையும் கொண்ட செம்பினாலான அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட 7 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தொன்மையான மனிதர்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் பெரிய அளவில் வாணிபம் நடந்ததற்கான சான்றாக இது கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.