விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள மேல் ஆவரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர், ஆனந்தராஜ் (வயது 32). இவருடைய மனைவி வள்ளி (வயது 26). இவர்கள் இருவரும் தென்றல் நகர் பகுதியில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு ஆனந்தராஜ் அடிக்கடி வள்ளியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் பிப்ரவரி 5 நேற்று இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கணவர் ஆனந்தராஜ் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையால் வள்ளியை கொடூரமாக தாக்கினார்.
இதில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. முகம், கை உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்டச் சொட்ட வள்ளி ராஜபாளையம் வடக்கு காவல் நிலையம் சென்று சம்பவம் குறித்து கூறி புகார் செய்தார். இதையடுத்து போலீசார், வள்ளியை ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் வீட்டில் இருந்த ஆனந்தராஜை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.