விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் தென்றல் நகரில் ஒன்றிய கவுன்சிலர் வள்ளிமயில் என்பவர் விஸ்வம் டெக்ஸ் என்ற பெயரில் ஜவுளிக்கடை மற்றும் நைட்டி தைக்கும் கடை நடத்தி வருகிறார். இங்கு வள்ளிமயிலின் தங்கை முத்துமாரி வேலை பார்த்து வருகிறார். முத்துமாரியின் கணவர் சுரேஷ் இராஜபாளையம் போக்குவரத்து காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார்.
தினமும் காலையில் முத்துமாரி கடையை திறந்துள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் மிளகாய் பொடியை தூவி முத்துமாரி அணிந்திருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். முத்துமாரி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டதால் மர்ம நபர் அவரை கீழே தள்ளிவிட்டு பாதி செயினை அறுத்து சென்றனர். முத்துமாரியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர் பைக்கில் தப்பி சென்றனர். சம்பவ இடத்தில் டிஎஸ்பி பிரீத்தி நேரில் ஆய்வு செய்து, விசாரணை நடத்தினார்.
மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் மிளகாய் பொடி தூவி செயின் பறித்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.