விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவியர்கள் தினந்தோறும் பேருந்து மூலம் அருப்புக்கோட்டை வந்து இங்குள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்காக வந்து செல்கின்றனர். இவ்வாறு பள்ளி நாட்களில் காலை மற்றும் மாலை வேளைகளில் சுற்றியுள்ள கிராமங்களுக்கு போதிய பேருந்து போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் பெரும்பாலான மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து வையம்பட்டி செல்லும் அரசு பேருந்தில் பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி சென்ற மாணவர் ஒருவர் புதிய பேருந்து நிலையம் எதிரே பேருந்து சென்று கொண்டிருக்கும்போது திடீரென தவறி விழுந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பின்னால் வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். நல்வாய்ப்பாக அந்த மாணவர் காயம் இன்றி உயிர் தப்பினார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.