விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இன்று, ரூ. 20.59 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளான கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையம், செவல் கண்மாய் புனரமைப்பு, கட்டங்குடி குடிநீர் சுத்திகரிப்பு, நீருந்து நிலையம் ஆகியவை திறக்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 24.33 கோடி மதிப்பில் 154 சாலைப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தி வரவேற்றார். வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாக இயக்குனர் மதுசூதன ரெட்டி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்து பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தார்.