விழுப்புரம்: விமர்சையாக நடைபெற்ற கூத்தாண்டவர் தேர் திருவிழா

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்துள்ள பெண்ணைவலம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த கூத்தாண்டவர் கோயில் உள்ளது. இக்கோயிலில், கடந்த 27 ஆம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன், வைகாசி பெருவிழா தொடங்கியது. 

அதனைத் தொடர்ந்து, நேற்றைய (ஜூன் 10) தினம் சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில், இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கூத்தாண்டவர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று (ஜூன் 11) நடைபெற்றது. 

இதில், திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களையும், ரூபாய் நாணயங்களையும் சுவாமிக்கு சூறையாடி, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வழிபாடு செய்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, இன்று அழுகளம் நிகழ்ச்சியும், தீமிதி திருவிழாவும் நடைபெறுகிறது. 

நாளைய தினம் (ஜூன் 12) மஞ்சள் நீராட்டுடன் இந்த வைகாசி பெருவிழா நிறைவடைகிறது. இந்தத் தேர்த் திருவிழாவைக் காண, பெண்ணைவலம் மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்களின் நலன்கருதி திருவெண்ணெய்நல்லூர் போலீசார் அதிக அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி