அவர் கூறியதாவது: சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் படிப்பை முடித்து, தற்போது சென்னை பல்கலையில் சைவ சித்தாந்தம் பயில்கிறேன். ஓய்வு நேரங்களில் தொல்லியல் சான்றுகளைத் தேடி, கள ஆய்வுக்குச் செல்வது வழக்கம். அவ்வாறு திருவெண்ணெய்நல்லூர் அருகில் உள்ள திருமுண்டீச்சரம் பகுதியில் பஸ்சில் சென்ற போது, பலகைக்கல் சிற்பத்தை கண்டேன். உடனே இறங்கி ஆய்வு செய்த போது, அது மூத்த தேவி சிற்பம் என்பதை அறிந்தேன்.
ஒரு வீட்டின் பின்புறத்தில், வேலிக்கு அருகில் சாய்த்துப்பட்ட நிலையில், பல ஆண்டுகளாக கிடந்த சிற்பம், தற்போது, வேலி அகற்றப்பட்டதால் தெரிய வந்துள்ளது. அமர்ந்த நிலையில், வலது கால் தொங்கவிட்ட நிலையில், இடது கால் மடித்த நிலையில் உள்ளது. சிலை வலது புறத்தில், மாந்தன், காக்கை கொடி, இடது புறத்தில் மாந்தி சிற்பம் உள்ளது. சிற்பத்தின் கீழ்ப் பகுதியில் கழுதை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.