விழுப்புரம்: குழாய் திருட்டை தடுக்க முயன்றவர் அடித்துக் கொலை.. வாலிபர் கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிபாடி, டி. புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்னதுரை மகன் ஏழுமலை (22), தனியார் ஒப்பந்ததாரர். இவர், திண்டிவனத்தை அடுத்த வெள்ளிமேடுபேட்டையில் தங்கியிருந்து குடிநீர் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாராம். இவரிடம், குறிஞ்சிபாடி வட்டம், சுப்புராயர் கோவில் தெருவைச் சேர்ந்த நாகராஜ் மகன் அன்பரசு (18), அதே பகுதியைச் சேர்ந்த ரோகன், நந்தகுமார் ஆகியோர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனராம். இந்த நிலையில், அன்பரசு சரியாக பணி செய்யவில்லை எனக் கூறி அவரை பணியிலிருந்து ஏழுமலை நீக்கிவிட்டாராம். 

இதனால், ஆத்திரமடைந்த அன்பரசு, வெள்ளிமேடுபேட்டையில் இருக்கும் ஏழுமலையின் வீட்டுக்குச் சென்று அவரை இரும்புக் கம்பியால் சனிக்கிழமை தாக்கினாராம். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த வெள்ளிமேடுபேட்டை போலீசார் சடலத்தை மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிந்து அன்பரசை சனிக்கிழமை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி