திண்டிவனம் சிவன் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு

விழுப்புரம் மாவட்டம், கிளியனூர் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோயில், திண்டிவனம் ஸ்ரீமரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரர் கோயில்களில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் புதன்கிழமை வழிபாடு மேற்கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மார்கழி தனூர் மாதம் முழுவதும் நாளொன்றுக்கு 10 சிவாலயங்கள் வீதம் 30 நாள்களிலும் 300 சிவாலயங்களுக்கு தருமபுரம் ஆதீனம் யாத்திரை மேற்கொண்டு வழிபாடு செய்யவுள்ளார். 

அதன்படி, தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் வழிபாடுகளை மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், புதன்கிழமை விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கிளியனூர் அகிலாண்டேஸ்வரர் கோயில், திண்டிவனம் மரகதாம்பிகை உடனுறை திந்திரினீஸ்வரர் கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார். தொடர்ந்து, கோயில்களில் இருந்த பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். தருமபுரம் ஆதீனம் கட்டளை சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள், ஆதீன உதவியாளர் கௌதமன் ஆகியோர் உடனிருந்தனர். கிளியனூர், திண்டிவனம் கோயில்களில் தருமபுரம் ஆதீனத்துக்கு பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கோயில் செயல் அலுவலர் ஆர். அருள், கணக்காளர் எஸ். சிவசங்கர் மற்றும் கோயில் பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி