வேலூர் அருகே தனியார் பேருந்து மோதி ஒருவர் பலி

வேலூர் சித்தேரியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 40). இவர் நேதாஜி மார்க்கெட்டில் பூ மொத்த வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக தொரப்பாடி ஆண்கள் ஜெயில் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பேருந்தை சலவன்பேட்டையை சேர்ந்த உமாசங்கர் (56) என்பவர் பாகாயத்தில் இருந்து வேலூர் நோக்கி ஓட்டி வந்தார். 

ஜெயில் அருகே பேருந்து வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த கார், 2 தள்ளுவண்டி கடைகள் மீது மோதியது. தொடர்ந்து அங்கு நின்று கொண்டு இருந்த மோகன்ராஜ் மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் விரைந்து சென்று மோகன்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி