வாணியம்பாடி: வீட்டில் பதுக்கி வைத்த வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் கிராமத்தை சேர்ந்தவர் சபரி(24) இவரது வீட்டில் அனுமதியின்றி நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த வெடிகள் மற்றும் பட்டாசுகள் திடீரென வெடித்து சிதறியது. இதில் சபரி என்பவருக்கு கை விரல்கள் துண்டாகியது, கண்கள் முழுவதும் படுகாயமடைந்தது.

வெடி வெடித்த சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக விரைந்து சென்று பார்த்த போது படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சபரியை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நாட்டு வெடிகள் மற்றும் பட்டாசுகள் தயாரிக்கும் போது வெடித்து சிதறியதா? அல்லது பதுக்கி வைத்திருந்த போது வெடித்ததா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி