வேலூர்: முதலமைச்சரின் வருகைக்கான அமைச்சர் ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் வருகை புரிந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாநில பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் ஈ.வ. வேலு தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக 7ம் தள கூட்டரங்கில் நடைபெற்றது. 

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு இரண்டாவது முறையாக வருகை தரவிருக்கும் முதலமைச்சர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். அதற்கான தகுதியான பயனாளிகளை விரைவில் தேர்ந்தெடுக்கவும், விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மேற்கொள்ள துறை சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். அரசு அலுவலர்கள் 2 வகையாக இருக்கிறார்கள். ஒன்று நாம் இந்த இடத்தில் இருக்கிறோம் விதிகளுக்குட்பட்டு மக்கள் பயனடையும் வகையில் கையெழுத்து போட்டு முன்னோக்கி பாசிட்டிவாக சிந்திப்பது. 

மற்றொன்று கையெழுத்து போட்டுவிட்டால் பிரச்சினை வந்துவிடுமோ என தயங்கி பின்னோக்கி சிந்திக்கும் நெகட்டிவ் சிந்தனை. பாசிட்டிவாக சிந்திக்கும் எந்தத் துறையாக இருந்தாலும் மக்களால் அந்தத் துறை பாராட்டப்படும். எனவே முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்கும்போது அதிக பயனாளிகள் பயன்பெற அரசு அலுவலர்கள் செயல்படுமாறு அறிவுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி