ராணிப்பேட்டை அருகே வேன் மோதி பள்ளி மாணவி பலி

அம்மூர் பகுதியை சேர்ந்தவர் கலைக்குமார் (வயது 45), கூலி வேலை செய்து வருகிறார். சுகன்யா இவரது மகள் (வயது 16) அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் (ஜூன் 12) வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய சுகன்யா, மாலையில் தனது தந்தையுடன் நோட்டு புத்தகங்கள் வாங்குவதற்காக ராணிப்பேட்டையை அடுத்த முத்துக்கடை நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். 

மாந்தாங்கல் அருகே வந்தபோது, தோல் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு, பின்னால் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் மாணவி சுகன்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை கலைக்குமார் பலத்த காயமடைந்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி