குடியாத்தம்: மின் ஒயர் திருட்டு.. வாலிபர் கைது

குடியாத்தம் ஒன்றியத்தைச் சேர்ந்த சேம்பள்ளி, அக்ராவரம் ஊராட்சிகளில் உள்ள குடிநீர் கிணறுகளில் மின் மோட்டார்கள் திருட்டுப்போயிருந்தது. இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல் கொட்டாரமடுகு, உப்பரப்பல்லி, தட்டப்பாறை, சின்னாலபல்லி, சூராளூர், சேங்குன்றம் உள்ளிட்ட பல கிராமங்களில் கடந்த சில நாட்களாக விவசாய நிலங்களில் உள்ள பம்ப்செட்களில் மின் மோட்டார்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் இருந்த மின் மோட்டார்கள் திருட்டுப்போனது. இது குறித்தும் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார்கள் அளித்திருந்தனர். அதன்பேரில் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர்கள் ராஜி, பழனிவேலு உள்ளிட்ட போலீசார் இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை காத்தாடிகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் ரோந்து சென்ற போது அந்த வழியாக வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர் தட்டப்பாறை அடுத்த மூலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த கோவிந்த ராஜ் மகன் விக்னேஷ் (வயது 19) என்பதும் விவசாய கிணறுகளில் மோட்டார்களை திருடியதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, மின் மோட்டார்களை மீட்டனர். மேலும் தொடர்ந்து இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி