பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா மலை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 26), கட்டிட மேஸ்திரி. பேரணாம்பட்டு அருகே உள்ள அனந்தகிரி கிராமத்தில் தனது மாமியார் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று மாலை மளிகை பொருட்கள் வாங்கிக்கொண்டு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பேரணாம்பட்டில் அரவட்லா செல்லும் சாலையில் தனியார் பள்ளி அருகில் சென்றபோது, குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு கல்மடுகு கிராமத்தை சேர்ந்த அருண் (26), அவரது தாயார் விஜயா (45), சித்தி ஆர்த்தி (38) ஆகிய 3 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலம் பைரெட்டிபல்லி கிராமத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர். 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த வெங்கடேசனை பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார். அருண், அவரது தாயார் விஜயா, சித்தி ஆர்த்தி ஆகியோர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாதன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.