வேலூர்: பெற்ற பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை

வேலூர் மாவட்டம் வேலூரை சேர்ந்தவர்கள் 49 மற்றும் 43 வயது சகோதரர்கள். இவர்கள் வேலூரை சேர்ந்த சகோதரிகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர். அண்ணன், தம்பி தம்பதியினருக்கு தலா 2 மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் கடந்த 2018-ம் ஆண்டு குடும்பத்துடன் சவுதி அரேபியாவில் தங்கியிருந்து வேலை செய்தனர். அந்த சமயத்தில் சகோதரர்கள் தங்களின் 12, 7 மற்றும் 6 வயது மகன்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதனை அறிந்த சிறுவர்களின் தாயார் உடனடியாக அவர்களை அழைத்து கொண்டு இந்தியாவிற்கு திரும்பினர். 

இந்த நிலையில் சில மாதங்களுக்கு பின்னர் இந்தியாவிற்கு வந்த சிறுவர்களின் 2 தந்தையும் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு சிறுவர்களின் மற்றொரு சித்தப்பா மற்றும் பாட்டியும் உடந்தையாக இருந்துள்ளனர். இதுகுறித்து சிறுவர்களின் தாயார் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2019-ம் ஆண்டு புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் நீதிபதி சிவக்குமார் தீர்ப்பு வழங்கினார். அதில் முதல் மற்றும் 2-வது குற்றவாளிகளான அண்ணன், தம்பிக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1½ லட்சம் அபராதமும், 3 மற்றும் 4-வது குற்றவாளியான சித்தப்பா, பாட்டிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 30 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி